NATIONAL

கூட்டுறவுக் கழகப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தலைவர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், ஏப் 30 –  தாம் தலைவராக இருக்கும் கூட்டுறவுக் கழகத்திற்குச் சொந்தமான  422,440 வெள்ளியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முதியவர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி சுலைமான் அகமது தர்மிஸி முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை ஃபெல்டா  பாலோங் அம்பாட் நெகிரி செம்பிலான் பெர்ஹாட் என்ற  கூட்டுறவுக் கழகத்தின் தலைவரான 73 வயது ஜைனோல் இஷாக் மறுத்து விசாரணைக் கோரினார்.

கடந்த 2020 ஆகஸ்டு மற்றும் 2021 நவம்பர் மாதத்திற்கு இடையில் கிம்மாஸ்,  ஜாலான் டாம்பினில் உள்ள வங்கியில் இருக்கும் கூட்டுறவுக் கழக கணக்கில் இருந்து தனது சொந்த உபயோகத்திற்காக நேர்மையற்ற முறையில் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும்  அபராதம் விதிக்க வகை செய்யும்  தண்டனைச் சட்டத்தின் 403வது பிரிவின் கீழ் அம்முதியவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தனது கட்சிக்காரர் மனைவி மற்றும் நான்கு பேரக்குழந்தைகளை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதோடு  உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு தரப்பு பரிந்துரைத்த ஒரு நபர் உத்தரவாதத்துடன் கூடிய 40,000 வெள்ளி ஜாமீன் தொகையைக் குறைக்கும்படி ஜைனோல் இஷாக்கின் வழக்கறிஞர் ஷாஹிதா முஸ்லிமா ரோஸ்லானி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை மே 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு மாதமும் எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் மற்றும் வழக்கு முடியும் வரை அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் ஒரு உத்தரவாதத்துடன் 20,000  வெள்ளி ஜாமீனில் விடுவித்தது.


Pengarang :