NATIONAL

சீர்திருத்த முயற்சிகளுக்கு முழு அர்ப்பணிப்பைத் தாருங்கள்- அரசு ஊழியர்களுக்கு வலியுறுத்து

புத்ராஜெயா, மே 2 – நாட்டின் நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வுக்காக மடாணி அரசு முன்னெடுத்துள்ள  சீர்திருத்த முயற்சிகளை  செயல்படுத்துவதற்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜுக்கி அலி வலியுறுத்தியுள்ளார்.

தொழிலாளர் தின விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட  அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான  அறிவிப்புக்கேற்ப  இது அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அறிவித்த பிரதமர் மற்றும் மடாணி அரசுக்கு ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது முகநூல் பதிவில்   குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அரசு ஊழியர்கள் இந்த டிசம்பர் மாதத்திலிருந்து  இருந்து 13 சதவீதத்திற்கும் அதிகமான சம்பள உயர்வை பெறுவார்கள் என்று பிரதமர் நேற்று  அறிவித்தார். இது நாட்டின் வரலாற்றில் அதிகப்பட்ச சம்பள உயர்வாகும். 1,000 கோடி வெள்ளிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டை இநாத சம்பள உயர்வு  உள்ளடக்கியுள்ளது.

இதனிடையே, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வழங்கிய  ஒரு தனி செய்தியில்,   தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை நாட்டின் வளர்ச்சி பெரிதும் சார்ந்துள்ளதோடு  நாட்டின் முக்கிய இயந்திரமாகவும் விளங்குகிறது என்று முகமது ஜுக்கி குறிப்பிட்டார்.

ஒருமைப்பாடு, உற்பத்தித்திறன், படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கம், அத்துடன் வலுவான அடையாள உணர்வைக் கொண்ட தொழிலாளர்கள் முக்கியமான சொத்துக்களாகும். இது மலேசியா மடாணியின் அபிலாஷைகளுக்கு ஏற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.


Pengarang :