NATIONAL

ருவாங் எரிமலை வெடிப்பு- வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை

புத்ராஜெயா, மே 2- இந்தோனேசியாவின் ருவாங் எரிமலை நேற்று  மீண்டும் மூன்று முறை  வெடித்ததைத் தொடர்ந்து நாட்டின் வான்வெளி அல்லது விமான நிலையங்கள் எதுவும் இதுவரை மூடப்படவில்லை என்று மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (சி.ஏ.ஏ.எம்.) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கேப்டன் நோராஸ்மான் மாமுட் தெரிவித்தார்.

இருப்பினும், எரிமலைக் குமுறலால்  வெளியான புகை 45,000 அடி முதல் 63,000 அடி வரை உயரத்திலும், 10,000 அடி இடை மண்டலத்திலும் இருப்பதால் விமானத்தின்  பறக்கும் உயரம் 35,000 அடியாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

விமானங்கள் பறப்பதற்கான உயரக் கட்டுப்பாடு பல்கோணப் பகுதியில்  (எஃப்.எல்.) 35,000 அடி மற்றும் அதற்குக் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

எரிமலை சாம்பல் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால்  கோலாலம்பூருக்குச் செல்லும் மற்றும் திரும்பும் விமானப் பயணங்கள் தொடர்கின்றன என்று அவர் நேற்று  பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.

விமான நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சி.ஏ.ஏ.எம். நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் நோராஸ்மான் தெரிவித்தார்.

ருவாங் எரிமலை நேற்று மூன்று முறை வெடித்து எரிமலைக்குழம்புகளை கக்கியதைத் தொடர்ந்து அதிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் ஐந்து கிலோமீட்டருக்கு மேல் காற்றில் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :