NATIONAL

ஃபாரஸ்ட் சிட்டி கேஸினோ  தொடர்பில் பொய்களைப் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை – பிரதமர்

புத்ராஜெயா, மே 2 – ஃபாரஸ்ட் சிட்டியில்  சூதாட்ட மையம் அமைக்கப்படுகிறது என்றக் குற்றச்சாட்டில்  தன்னையும் அரசாங்கத்தையும் எந்த தரப்பினரும் தொடர்பு படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளவர்கள் அரசியல் ரீதியாக திவாலானவர்கள் என்று விவரித்த அன்வார், இந்த விஷயத்தில்  பேரரசர்  சுல்தான் இப்ராஹிம் ஃபாரஸ்ட் சிட்டியில் சூதாட்ட மையத்தை  அமைக்கும்  யோசனையை ஒருபோதும் முன்வைக்கவில்லை என்று கூறினார்.

அங்கு சூதாட்ட மையத்தை அமைப்பதற்கான  எந்த ஆர்வத்தையும் மாட்சிமை தங்கிய பேரரசர் என்னிடம் குறிப்பிடவில்லை.

அப்படியானால் அது (குற்றச்சாட்டு) எங்கிருந்து வந்தது? மோசமானவர்களிடமிருந்து இவை யாவும் வந்தன. அவர்கள்தான் சுங்கை பூலோவில் (சிறையில்) உள்ள எனது அறையை  நிரப்ப வேண்டியவர்கள் என்று அவர் நேற்று  புத்ராஜெயா அனைத்துலக  மாநாட்டு மையத்தில் நடைபெற்ற  2024 தொழிலாளர் தின விழாவில் கூறினார்.

இந்த நபர்களுக்கு அரசாங்கத்தை விமர்சிக்க சுதந்திரம் உள்ளது ஆனால் அரச ஸ்தாபனத்தை அல்ல என்பதை அன்வார் நினைவுபடுத்தினார்.

நீங்கள் ஆட்சியாளர்களை புண்படுத்துகிறீர்கள். மேலும் ஆட்சியாளர்கள் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி நாம் அனைவரும் மதிக்கும் மற்றும் ஆதரிக்கும் ஒரு தேசிய ஸ்தாபனம். நம்மிடம் மன்னராட்சி முறை உள்ளது. அதை அரசியல்வாதிகள் போல் நடத்த முடியாது. விருப்பத்துக்கு தாக்குகிறார்கள். இது கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என்றார் அவர்.

ஃபாரஸ்ட் சிட்டியில்  சூதாட்ட மையத்தை  நிறுவ பல தொழிலதிபர்களுடன் மலேசியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கடந்த வாரம் பெர்ஜயா கார்ப்ரேஷன் நிறுவனர் டான் ஸ்ரீ வின்சன்ட் டான் மற்றும் கெந்திங் குழுமத்தைச் சேர்ந்த டான் ஸ்ரீ லிம் கோக் தாய் ஆகியோரை  அன்வார் சந்தித்ததாகவும் அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்று கூறியது.

இக்கூட்டத்தில் சுல்தான் இப்ராஹிம் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.


Pengarang :