NATIONAL

மகளிர், இளைஞர் நலனுக்கு ஒற்றுமை அரசு வேட்பாளர் முன்னுரிமை

உலு சிலாங்கூர், மே 2- கோல குபு பாரு இடைத்தேர்தல்  பிரச்சாரத்தில் ஒற்றுமை அரசு வேட்பாளர் இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) திட்டத்தைத் தொடர்வதன் மூலம் இவ்விரு தரப்பினரின்  நலன் பாதுகாக்கப்படுவதை தாம் உறுதி செய்யவுள்ளதாக  பாங் சோக் தா தெரிவித்தார்.

தொழில் திறன் பயிற்சி, தொழில்முனைவோரியல், பொழுதுபோக்கு, ஒற்றுமை மற்றும் விளையாட்டு போன்ற இளைஞர்களை மேம்படுத்தும் பல திட்டங்களை  ஏற்பாடு செய்வதே எனது திட்டமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இத்தொகுதியில் குறிப்பாக, அதிக உயர் மதிப்பிலான  மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்ட செரெண்டா பகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியமாகும் என்றார் அவர்.

இங்குள்ள கே.கே.பி. தீயணைப்புத் துறை அகாடமி திடலில் நேற்று நடைபெற்ற நட்புமுறை கால்பந்தாட்டப் போட்டியின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான  லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி    காலமானதைத் தொடர்ந்து  அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில்  ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல்,  பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் இடையே நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.


Pengarang :