NATIONAL

இந்திய சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லையா? மடாணி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார் ! பிரதமர்

கோலாலம்பூர், மே 2- இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்திற்கு மடாணி அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கும் வகையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள நான்கு முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேற்றிரவு வழங்கிய பேட்டியில், இந்திய சமூகத்தை மடாணி அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை எனத் திட்டவட்டமாகக் கூறிய அவர், இந்தியர்களின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகக் கூறினார்.

எந்த தரப்பையும் புறந்தள்ளாமல் சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களுக்கும் உதவுவதற்கான அணுகு முறையை மடாணி அரசாங்கம் கடைபிடிக்கிறது என்றார் அவர்.

குடியுரிமை

மலேசியாவில் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்களுக்கு கூட இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை. இப்பிரச்சனைக்குத் தீர்வு காண நாங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். முதன் முறையாக இப்போது அதிக எண்ணிக்கையிலான குடியுரிமை பிரச்சனைகளுக்கு உள்துறை அமைச்சு தீர்வு கண்டுள்ளது என அவர் சொன்னார்.

மித்ரா

இந்திய சமூகத்தில்  சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பான மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கு (மித்ரா) அரசாங்கம் ஆண்டு தோறும்  10 கோடி வெள்ளியை வழங்கி வருகிறது.

இந்த மித்ரா நிதியின் கீழ் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு தொழில்திறன் பயிற்சி, உயர் கல்வி கட்டண உதவி போன்ற கல்வித் திட்டங்களுக்கும்  விவசாயம் மற்றும் கிக் பொருளாதாரத் துறை உள்ளிட்ட   தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதோடு மட்டுமின்றி, இந்திய சமூகத்தைக் குறிப்பாக பி40 தரப்பினரை இலக்காகக் கொண்டு சமூகவியல் மற்றும் சமூக நலத் திட்டங்களும் கலை, கலாசாரம், மொழி, விளையாட்டு போன்ற நடவடிக்கைளும் மித்ரா மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தெக்குன்

இது தவிர, தெக்குன் எனப்படும்  தொழில்முனைவோர் பொருளாதார மேம்பாட்டு நிதியின் கீழ் இந்திய தொழில் முனைவோருக்காக  2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தெக்குன் திட்டத்தின் கீழ் ஸ்புமி எனப்படும் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பெண் தொழில் முனைவோர் எளிதான முறையிலும் விரைவாகவும் சிறுதொழில் கடனுதவிகளைப் பெறுவதற்கு இந்த திட்டம் வழி வகுக்கிறது.

‘ஸ்புமி கோஸ் பிக்‘ எனும் ஸ்புமி திறன் கடன் உதவித் திட்டத்திற்கு மேலும் 3 கோடி வெள்ளியை தெக்குன் ஒதுக்கியுள்ளது.

அமானா இக்தியார் மலேசியா

மேலும், இந்திய பெண்  தொழில்முனைவோருக்கு ஆக்கத் திறனளிப்பதற்காக 5 கோடி வெள்ளி நிதித் திட்டம் அமானா இக்தியார் மலேசியா மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய கடனுதவித் திட்டங்கள் வாயிலாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழில் முனைவோர் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்திக்  கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

பெட்ரோனாஸ் உபகாரச் சம்பளம்

  அரசு சார்பு நிறுவனமான பெட்ரோனாஸ் மூலம் இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்நிறுவனத்தில் சுமார் 1,000 இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் விளம்பரப்படுத்தப் படாததால் யாருக்கும் தெரியாமல் போனது என அன்வார் அப்பேட்டியில் குறிப்பிட்டார்.

அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை வன்மையாக மறுத்த பிரதமர், சுயநலமும் பணபலமும் கொண்ட தரப்பினர் இந்திய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறாதீர்கள். கடந்த ஆண்டுகளில் பூமிபுத்ராக்களுக்கு நாம் அதிகமாக வழங்கியுள்ளோம். அதே சமயம் இந்திய சமூகத்திற்கும் அதிகமாக வழங்கினோம் என்றார் அவர்.

பராமரிப்பு பணிகளுக்காகத் தமிழ், சீனப் பள்ளிகள் உட்பட நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வி அமைச்சின் வாயிலாக அரசாங்கம் தொடர்ந்து மானியங்களை வழங்கி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :