NATIONAL

பேரரசருக்கு எதிராக நிந்தனைக் கருத்துகளை வெளியிட்டதாகப் பாப்பாகோமோ மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 2- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமிற்கு
எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்துகளை
வெளியிட்டதாக இணையப் பதிவேட்டாளரான பாப்பாகோமோ என
அழைக்கப்படும் முகமது அஸ்ரி வான் டெரிஸ் மீது இங்குள்ள செஷன்ஸ்
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி சித்தி அமினா கசாலி முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டு
வரப்பட்ட குற்றச்சாட்டை 41 வயது வான் முகமது அஸ்ரி மறுத்து
விசாரணை கோரினார்

கே.கே.சூப்பர்மார்ட் அண்ட் சூப்பர்ஸ்டோர் சென். பெர்ஹாட் நிறுவனத்தின்
நிறுவனர் மாட்சிமை தங்கிய பேரரசரை சந்தித்தது தொடர்பில்
ஆட்சியாளருக்கு எதிராக நிந்தனைக்குரிய கருத்துகளை தனது எக்ஸ்
தளத்தல் வெளியிட்டதாக அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள்
ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் தேதி நண்பகல் 12.00 மணியளவில் தலைநகர், புக்கிட்
பிந்தாங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தைப்
புரிந்தாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் 5,000 வெள்ளி அபராதம்,
அல்லது மூன்றாண்டுகளுக்கும் மேற்போகாத சிறை அல்லது இரண்டுமே
விதிக்க வகை செய்யும் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)(சி)
பிரிவு மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 4(2)இன் கீழ் அவர் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளார்.

அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர்களான கைருள் அஸ்ரின்
மாமாட், முகமது சப்ரி ஓத்மான் மற்றும் அப்துல் மாலிக் ஆயோப்
வழக்கை நடத்தும் வேளையில் வான் முகமது அஸ்ரி சார்பில் முகமது ராஃபி ரஷிட் அலி, லோகன் இஸ்கந்தார் அப்துல்லா ஆகியோர் ஆஜராகின்றனர்.


Pengarang :