NATIONAL

மலேசியாவில் மைக்ரோ சோப்ட் நிறுவனம் வெ.1,050 கோடி வெள்ளி முதலீடு 

கோலாலம்பூர், மே 2- மலேசியாவில் அடுத்த நான்காண்டுகளில் அடிப்படை வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறைகளில் 220 கோடி டாலரை (1,050 கோடி வெள்ளி) மைக்ரோசோப்ட் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.

இலக்கவியல் கட்டமைப்பை உருவாக்குவது, ஏ.ஐ. திறன் வாய்ப்புகளை உருவாக்குவது, தேசிய ஏ.ஐ. அடைவு நிலை மையத்தை அமைப்பது, நாட்டின் இணைய பாதுகாப்பு ஆற்றலை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த முதலீடு செய்யப்படுவதாக மைக்ரோ சோப்ட் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல்முறை அதிகாரியுமான சத்யா நடேல்லா கூறினார்.

ஏ.ஐ. உள்பட க்ளாவ்ட் கணினி மற்றும் மேம்பாடைந்த தொழில்நுட்ப மையமாக மலேசியாவை உருவாக்கும் மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் கடப்பாட்டின் அடிப்படையில் இந்த முதலீடு செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்து ஸ்தாபனங்கள், மென்பொருள் உற்பத்தியாளர்கள், தொடக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்நாட்டில் உலகத் தரத்திலான அடிப்படை வசதிகளை நாங்கள் கொண்டிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். இதன் வழி இந்நாட்டின் மற்றும் இந்த பிராந்தியத்தின் உருவாக்கத்திற்கும் பங்களிக்க முடியும் என்று அவர் சொன்னார்.

இன்று இங்கு நடைபெற்ற மைக்ரோசோப்ட் பில்ட் ஏ.ஐ. டே எனும் நிகழ்வில் முக்கிய உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மைக்ரோ சோப்ட் நிறுவனம் மலேசியாவில் தடம் பதித்த 32 ஆண்டுகளில் அதிக முதலீடுகளைச் செய்வது இதுவே முதன் முறையாகும் எனக் குறிப்பிட்டார்.


Pengarang :