NATIONAL

கோல குபு பாருவில் ஹராப்பான் வேட்பாளரின் வெற்றி, ஒற்றுமை அரசின் பலத்தை நிரூபிக்கும்

உலு சிலாங்கூர், மே 3- கோல குபு பாரு இடைத் தேர்தலில் பக்கத்தான்
ஹராப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவுக்கு கிடைக்கக்கூடிய வெற்றி
பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டு பலத்தின்
வெளிப்பாடாகவும் வரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கான
அக்கூட்டணியின் ஆற்றலை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும்.

இந்த இடைத் தேர்தலில் பெறக்கூடிய வெற்றி ஒற்றுமை அரசாங்கத்தின்
உறுப்புக் கட்சிகளின் மனவுறுதியை மட்டுமின்றி அக்கூட்டணியில் உள்ள
18 கட்சிகளின் ஆக்ககரமான ஒத்துழைப்பை எடுத்துக் காட்டும் விதமாகவும்
இருக்கும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமது
மஸ்லான் கூறினார்.

பாரிசான் நேஷனல் முதன் முறையாக ஜசெகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்
செய்வதால் இந்த இடைத் தேர்தல் ஒரு மைல்கல்லாக விளங்கும்.
எனினும் இதனால் இந்த கூட்டணி எந்த சவாலையும்
எதிர்கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.

இதன் காரணமாகத்தான் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது மிக
முக்கியம் எனக் கூறுகிறோம். போட்டி கடுமையானதாக இருந்தாலும்
கூட்டணிக் கட்சிகளுக்குகிடையிலான ஒற்றுமை வெற்றிக்கு வழி
வகுத்தது என்பதை நிரூபிக்க முடியும் என்றார் அவர்.

இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் இதர இடைத் தேர்தல்களிலும்
நாம் வெற்றி பெற முடியும் என்பதற்கான அறிகுறியாக இது விளங்கும்
என்று நேற்று இங்குள்ள தகவல் அமைச்சின் ஊடக மையத்திற்கு வருகை
புரிந்த போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் பாங்கின் வெற்றி மாநில மற்றும் மத்திய
அரசுகளுக்கிடைய முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பை ஏற்படுத்தும் என்பதோடு இதன் மூலம் தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார் அவர்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு.
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் வரும் மே 11ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :