NATIONAL

கே.கே.பி. இடைத் தேர்தல்- வேட்பாளர்கள் உள்ளூர் விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்- ரமணன் வலியுறுத்து

உலு சிலாங்கூர், மே 3- கோல குபு பாரு இடைத் தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தில் தேசிய விவகாரங்களை அல்லாமல்
உள்ளூர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மீது மட்டுமே கவனம்
செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்குத்
‘தீர்வு காண்பதற்கான வழிகளை ஆராய்வதில் வேட்பாளர்கள் முனைப்பு
காட்ட வேண்டும் என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும்
கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

கோல குபு பாரு தொகுதி தொடர்பான விவகாரங்களுக்கு மட்டுமே
வேட்பாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதைவிடுத்து தேசிய
விவகாரங்களை பேசுவதற்கு இந்த பிரச்சாரத்தை அவர்கள் ஒரு வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. அதே சமயம், அவதூறு பரப்பும்
செயல்களிலிருந்தும் அவர்கள் விலகியிருக்க வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.

குறிப்பாக, அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களும் மோசமானவை,
மக்களுக்கு பயன் தராதவை எனக் கூறினால், அத்தகைய குற்றச்சாட்டுகள்
இந்தியர், சீனர், மலாய்க்காரர் என்ற பேதமின்றி சமூகத்தின் அனைத்து
நிலையான மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிமின் துணைவியாருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான்
அஜிசாவுடனான ‘சந்தாய் பெர்சாமா காக் வான்‘ எனும் நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோல குபு பாருவில் போதுமான வர்த்தக வளாகங்கள் இல்லை என்ற
தொகுதி மக்களின் புகார் குறித்து கருத்துரைத்த அவர், இவ்விவகாரம்
ஏற்கனவே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச்

செல்லப்பட்டவிட்டதாகவும் இதற்கு தீர்வு காண்பதற்கு சிறிது காலம்
பிடிக்கும் என்றும் அவர் பதிலளித்தார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு.
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் எதிர்வரும் மே 11ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :