NATIONAL

கிளந்தானில் முதலீடு செய்ய கட்டார், ஜப்பானுக்குப் பிரதமர் அன்வார் வேண்டுகோள்

கோத்தா பாரு, மே 3- கிளந்தான் மாநிலத்தில் முதலீடு செய்ய ஜப்பான்
மற்றும் கட்டார் ஆகிய நாடுகளை தாம் ஊக்குவிப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் முதன்மைத் தலைவர் என்ற முறையில் மலேசியாவிலுள்ள
அனைத்து மாநிலங்களின் மேம்பாட்டிற்கும் உதவ தாம் தொடர்ந்து
முயன்று வருவதாக அவர் சொன்னார்.

கிளந்தான் அரசாங்கத்திடமிருந்து தமக்கு எந்த அதிகாரமும் எப்போதும்
கிடைக்காத போதிலும் மக்களுக்கு உதவி செய்ய முடிந்த வரை
முயல்வது தமது கடமையாகும் என அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஜப்பான் மற்றும் கட்டாருக்கு பயணம் மேற்கொண்டிருந்த
போது நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களோடு கிளந்தானிலும் முதலீடு
செய்யும்படி அந்நாட்டுத் தலைவர்களைத் தாம் கேட்டுக் கொண்டதாக
அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள துஞ்சாங் புறநகர் உருமாற்று மையத்தில் நேற்று
நடைபெற்ற 2024 நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டு
உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர்
டத்தோஸ்ரீ முகமது சாபு, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்
நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிளந்தான் மாநிலத்தில் விவசாயத் திட்டங்கள் பெரிய அளவில்
மேற்கொள்ளப்படுவதற்கு எதுவாக நில அங்கீகார நடவடிக்கைகளை மாநில
அரசு விரைவுபடுத்தும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அன்வார்
சொன்னார்.


Pengarang :