NATIONAL

உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகன அணி மீது இஸ்ரேல் தாக்குதல்- மலேசியா கண்டனம்

புத்ராஜெயா, மே 3- ஜோர்டானிலிருந்து உதவிப் பொருள்களுடன் காஸா
நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகன அணி மீது இஸ்ரேல்
மேற்கொண்ட இரக்கமற்ற மற்றும் கொடூரத் தாக்குலுக்கு மலேசியா கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகன
அணிக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வி கண்டதற்கு
இஸ்ரேலிய அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று வெளியுறவு
அமைச்சு (விஸ்மா புத்ரா) நேற்று வலியுறுத்தியது.

பாதுகாப்பான பயணத்தை உறுதிச் செய்யத் தவறிய இஸ்ரேலின்
நடவடிக்கை, அனைத்துலகச் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச்
சட்டத்தின் கீழ் தனக்குள்ள பொறுப்பை அந்நாடு அலட்சியப்படுத்தியதை
புலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று அது கூறியது.

குடியேற்றவாசிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை
இஸ்ரேலிய அரசாங்கம் சிறிதும் பொருட்படுத்தவில்லை என்றும் விஸ்மா
புத்ரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோதக்
குடியேற்றம் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களை
முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இஸ்ரேலை நிர்பந்திக்க அனைத்துலகச்
சமூகத்திற்கு கடப்பாடு உள்ளது என்றும் அது தெரிவித்தது.


Pengarang :