NATIONAL

1998 முதல் நாடு முழுவதும் 115,039 பி.பி.ஆர். வீடுகள் நிர்மாணிப்பு- அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கோல சிலாங்கூர், மே 6- கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும்
202 மக்கள் வீட்டுமைத் திட்டங்கள் (பி.பி.ஆர்.) வாயிலாக மொத்தம் 11,039
வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்புத் துறை அமைச்சர் ங்கா
கார் மிங் கூறினார்.

மேலும் 7,517 வீடுகளை உள்ளடக்கிய 19 திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு
வரும் வேளையில் 6,006 வீடுகளை உட்படுத்திய 19 திட்டங்கள் திட்டமிடல்
நிலையில் உள்ளன என்று அவர் சொன்னார்.

இந்த வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்காகக் கூட்டரசு அரசாங்கம்
ஒதுக்கிய மொத்த தொகை 1,200 கோடி வெள்ளியாகும் என இன்று இங்கு
ஹர்மோனி மடாணி வீடமைப்புத் திட்டம் தொடர்பான அறிவிப்பை
வெளியிட்டப் பின்னர் செயதியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த 245 குடும்பங்களுக்காக 8.09 ஹெக்டர்
பரப்பளவில் இந்த ஹர்மோனி மடாணி பி.பி.ஆர். வீடமைப்புத் திட்டம்
உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முற்றுப் பெறும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 1,200 சதுர அடி பரப்பளவிலான இந்த வீடுகள் மூன்று
அறைகளைக் கொண்டிருக்கும். 7 கோடியே 50 லட்சம் வெள்ளியை
உள்ளடக்கிய இந்த வீடமைப்புத் திட்ட நிர்மாணிப்பில் சிலாங்கூர் அரசும்
பெர்ஜெயா கார்ப்ரேஷன் நிறுவனமும் சம்பந்தப்பட்டுள்ளன.

கோல சிலாங்கூர் வட்டாரத்திலுள்ள மேரி தோட்டம், நைகல் கார்டனர்
தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம் மற்றும்
மின்யாக் தோட்டத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் கடந்த 26
ஆண்டுகளாக எதிர்நோக்கி வந்த போராட்டம் அமைச்சரின் இந்த
அறிவிப்பின் வழி முடிவுக்கு வந்துள்ளது.


Pengarang :