NATIONAL

போலீஸ் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இன்ஸ்பெக்டர் கோபி மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 9 – சக அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு அவரை  தகாத வார்த்தைகளால்  திட்டியதாகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் எஸ்.மகேஸ்வரி முன்னிலையில் தமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை கே.கோபி  (வயது 34) என்ற அந்த அதிகாரி மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த மே 5 ஆம் தேதி டாங் வாங்கி, மெனாரா 2 புக்கிட் அமானில் போலீஸ் புகார் தொடர்பாக ஆதாரங்களை  அளிக்க மறுத்ததன் மூலம்  ஏஎஸ்பி கைரில் அசுவாட் அப்துல்  அஜிஸின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கோபி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே இடத்தில்,  நேரத்தில் ஏஎஸ்பி கைரிலை நோக்கி அவதூறான மற்றும் அவமரியாதையான வார்த்தைகளை பிரயோகித்ததாகவும்  அவர் மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தண்டனைச் சட்டத்தின் 186வது பிரிவு மற்றும்  1955ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் 14வது பிரிவு  ஆகியவற்றின் கீழ்  இன்ஸ்பெக்டர் கோபிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அரசுத் தரப்பில் இந்த வழக்கை நடத்தும் துணை பப்ளிக் புரோசிகியூட்டர்   சரிகா பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு  ஜாமீன் வழங்க பரிந்துரைக்கவில்லை. எனினும்,  குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கே.சண்முகம், தனது கட்சிக்காரரின்  உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் குடும்பப் பொறுப்புகளைக் காரணம் காட்டி ஜாமீன் கோரினார்.

இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் 3,000 வெள்ளி ஜாமீன் வழங்கிய  மாஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரி,  இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

– பெர்னாமா


Pengarang :