NATIONAL

வருமானம் ஈட்டித் தராத நீரினால் ஆண்டுக்கு வெ.200 கோடி இழப்பு

கோலாலம்பூர், மே 9 – வருமானம்  ஈட்டித் தராத நீர் (என்.ஆர்.டபள்யூ.) பிரச்சனையால் ஆண்டுக்கு 200 கோடி வெள்ளி வரை  இழப்பு ஏற்படுவதால் அரசாங்கம் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்துகிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ  ஃபாடில்லா யூசோப் இன்று தெரிவித்தார்.

வீணே பயனற்றுப் போகும் நீர் பிரச்சனையை  நீர் விநியோக நிறுவனங்கள் மிகவும் திறம்படவும் நிலையான முறையிலும் கையாள்வதில்  உதவுவதற்கு இணை மானியங்களை வழங்குவதும்  இந்த முயற்சிகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.

பழைய குழாய்களில் ஏற்படும்  கசிவு மற்றும் சேதம்  போன்றவை சுத்திகரிக்கப்பட்ட  நீர்  வருமானம் ஈட்டித் தராமல் பயனற்றுப் போவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. பழைய குழாய்களை மாற்றுவதற்கு கணிசமான  நிதி தேவைப்படுகிறது.

ஐந்து சதவீதத்திற்கும் அதிகமாக நீர் பயனற்றுப் போகும்   மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியங்களை வழங்குவதன் மூலம் உதவ முடியும். ஏற்கனவே சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு பழைய குழாய்களை மாற்றுவதற்கு கடன்கள் வழங்கப்படும். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை  எங்கள் முயற்சி தொடரும்  என அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சராகவும் இருக்கும் ஃபாடில்லா, இன்று இங்கு ‘நீர் நிலைத்தன்மைக்கான எதிர்கால தலைவர்கள் 2024: நீர் மீள்தன்மைக்கான தாக்கத்தை துரிதப்படுத்துதல்’ என்ற ஆய்வரங்கில்  முக்கிய உரையை ஆற்றிய பின்னர் செய்தியாளர்களிடம்  இதனைக் கூறினார்


Pengarang :