NATIONAL

பிரதமர் அன்வார் இந்திய சமூகத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்! பத்து காஜா எம்பி சிவக்குமார் நம்பிக்கை

கோலாலம்பூர் மே 9- இந்திய சமுதாயத்தின் மீது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு எப்போதும் அன்பும் பாசமும் உண்டு.

அந்த வகையில் அவர் ஒருபோதும் இந்திய சமூகத்தை கைவிடமாட்டார் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் இன்று தெரிவித்தார்.

அவர் பிரதமராக பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகள் மேல் ஆகிறது. அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஐந்து ஆண்டுகள் அவர் முழுமையாக ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குவோம்.

இந்த ஐந்து ஆண்டுகளில் கண்டிப்பாக அவர் இந்திய சமுதாயத்திற்கு நிறையவே செய்வார் என்று மனிதவள முன்னாள் அமைச்சருமான அவர் சொன்னார்.

மித்ராவுக்கு 10 கோடி, தெங்குனுக்கு 3 கோடி வெள்ளி, பெண் எனப்படும் அமானா இக்தியார் திட்டத்திற்கு 5 கோடி வெள்ளி, இந்திய இளைஞர்களின் தீவேட் தொழில் திறன் கல்விக்கு 20 லட்சம் வெள்ளி, தமிழ்ப் பள்ளிகளுக்குக் கோடிக்கணக்கான வெள்ளி மானியம் வழங்கப்படுகிறது.

இனி வரும் காலங்களில் இந்தியர்களுக்கு அதிக அளவில் உதவிகளை வழங்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆகவே இந்திய சமூகம் எந்த வகையிலும் ஏமாற்றப்படாது என்று அவர் சொன்னார்.

2008 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ராக்யாட் – பக்கத்தான் ஹராப்பான் ஆட்சி புரிவதிலிருந்து இந்திய சமுதாயத்திற்குக் கோடிக் கணக்கில் மானியத்தை சிலாங்கூர் அரசு வழங்கியுள்ளது.

ஆகவே, கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :