NATIONAL

டிங்கி தடுப்பு பணிகளுக்காகச் சிலாங்கூர் அரசுக்கு வெ.10 லட்சம் நன்கொடை

ஷா ஆலம், மே 10- மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களை தடுக்கும்
முயற்சிக்கு உதவும் வகையில் மாநில அரசு காவ் மலேசியா சென்.
பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து 971,172 வெள்ளியை நன்கொடையாகப்
பெற்றது.

டிங்கி தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் கொசுக்களை
விரட்ட உதவும் 61,080 சீரம் மருந்துகளை வழங்கியுள்ளது.

இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின்
வரவேற்புக் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த
நன்கொடையை காவ் மலேசியா நிறுவனத்தின் தலைவர் நிஷிமாக்கி
அகிராவிடமிருந்து சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்ஜமாலியா ஜமாலுடின் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜமாலியா, டிங்கி பரவலைத் தடுக்கும் மாநில
அரசின் முயற்சிகளுக்கு காவ் மலேசியா நிறுவனம் வழங்கி வரும்
ஒத்துழைப்புக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகச் சொன்னார்.

தங்கள் வசிப்பிடங்களில் ஏடிஸ் கொசுக்களின் பரவல் கட்டுப்பாட்டில்
இருப்பதற்கு ஏதுவாக பொது சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மை குறித்த
விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் இத்தகைய
ஒத்துழைப்பு பெரிதும் துணை புரியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த முயற்சி சிலாங்கூர் மக்களுக்கு நேர்மறையான விளைவுகளை
ஏற்படுத்தும் என தாம் நம்புவதோடு எதிர்காலத்தில் டிங்கி நோயிலிருந்து
விடுபட்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதற்குரிய தூண்டுகோலாகவும்
இது அமையும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய நிஷிமாக்கி அகிரா, மாநில
அரசு ஏற்பாடு செய்யும் டிங்கி ஒழிப்பு நிகழ்வுகளில் இந்த சீரம் கொசு
விரட்டும் மருந்து விநியோகிக்கப்படும் என சொன்னார்.

மாநில அரசின் திட்டங்கள் தவிர பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கூட்டு
துப்புரவு இயக்கங்களின் போது இந்த மருந்து விநியோகிக்கப்படும் என்றார்
அவர்.


Pengarang :