NATIONAL

பொது மக்களின் வசதிக்காகத் தொகுதி சேவை மையத்தில் பல்லின ஊழியர்கள்- ஒற்றுமை அரசின் வேட்பாளர் வாக்குறுதி

உலு சிலாங்கூர், மே 10 – பொது மக்கள் எளிதான முறையில்
அணுகுவதற்கு ஏதுவாக கோல குபு பாரு தொகுதி சேவை மையத்தில் பல
இனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

இந்நடவடிக்கை வாயிலாக மக்களுடனான தொடர்புகளை எளிதாக்கி
அவர்களுக்கு உரிய சேவைகள் வழங்கப்படுவதையும் நலன்
காக்கப்படுவதையும் உறுதி செய்ய முடியும் என்று ஒற்றுமை அரசின்
வேட்பாளரான பாங் சோக் தாவ் கூறினார்.

இந்த இடைத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மக்களுக்கான
சேவைகளும் அவர்களுடனான தொடர்பும் எளிதாக இருக்கும் வகையில்
எனது குழுவினரும் அலுவலக ஊழியர்களும் சீன, இந்திய, மலாய் மற்றும்
பூர்வக்குடியினரை உள்ளடக்கியிருப்பர் என்று அவர் தெரிவித்தார்.

இது பல்லின சமூகத்தின் தோற்றத்தை புலப்படுத்தும் விதமாகவும்
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும்
அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு இங்குள்ள கோல குபு பாரு மினி ஸ்டேடியத்தில் நடைபெற்ற
ஒற்றுமை அரசின் மாபெரும் இறுதி பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய
போது அவர் இதனைக் கூறினார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு,
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தொகுதியில் மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்களில் 39,362 பேர் சாதாரண வாக்காளர்களாவர். மேலும் 625
போலீஸ்காரர்கள் மற்றும் 238 இராணுவ வீரர்களும் அவர்களின்
துணைவியரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


Pengarang :