NATIONAL

ஒற்றுமை அரசின் வேட்பாளரின் தேர்தல் அறிக்கை இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு உதவும்

உலு சிலாங்கூர், மே 10- ஒற்றுமை அரசின் வேட்பாளரின் ஐந்து
கோட்பாடுகளை உள்ளடக்கிய தேர்தல் கொள்கையறிக்கை பொது
மக்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்குப் பெரும் பயன்மிக்கதாக
விளங்கும் என்று சிலாங்கூர் மாநிலப் பக்கத்தான் ஹராப்பான் தலைவர்
கூறினார்.

ஒற்றுமை அரசின் வேட்பாளரான பாங் சோக் தா முன்வைத்துள்ள
வாக்குறுதிகள் வெற்றியை மட்டும் நோக்கமாக கொண்டதல்ல. மாறாக
மக்களின் நல்வாழ்வை குறிப்பாக பொருளாதார ரீதியான மேம்பாட்டை
உறுதி செய்யும் நோக்கிலானது என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
சொன்னார்.

கடந்த வாரம் பாங் வெளியிட்ட தேர்தல் கொள்கையறிக்கையைப் பார்த்த
போது அவர் வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை
என்பது தெரிய வருகிறது. அதையும் தாண்டி மறைந்த லீ கீ ஹியோங்கின்
சேவைகளையும் தொடர விரும்புகிறார் என அவர் தெரிவித்தார்.

மக்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் நலன் தொடர்ந்து
காக்கப்படுவதை உறுதி செய்ய பாங் விரும்புகிறார். இது போன்றத்
தலைவர்களைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, கல்வியைப்
பற்றி, கடனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களை அல்ல என அவர்
குறிப்பிட்டார்.

கல்வியைப் பற்றி கேட்டால் எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஒரு
வேளை சட்டன்றத்தில் நுழைந்தால் அவரால் (எதிர்க்கட்சி வேட்பாளர்)
எந்த பதிலும் அளிக்க இயலாது என்று நேற்றிரவு இங்கு நடைபெற்ற
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில்
உரையாற்றிய போது மாநில ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான
அவர் தெரிவித்தார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு,
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.


Pengarang :