NATIONAL

நெரிசலைத் தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் வாக்களிக்கச் செல்வீர்- எஸ்.பி.ஆர். ஆலோசனை

உலு சிலாங்கூர், மே 10- நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வாக்களிக்கச்
செல்லுமாறு கோல குபு பாரு இடைத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கும்
வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் வாக்குச் சாவடிக்குச் செல்லுமாறு
வாக்காளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைவரும் காலையில்
சென்றால் வாக்குச் சாவடிகளில் நெரிசல் ஏற்படும்.

முடிந்த வரை பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் வாக்குச் சாவடிக்குச்
செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். அது சாத்தியமில்லை என்றால்
பாதகமில்லை. வசதியான நேரத்தில் வரலாம் என்று தேர்தல்
ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மாள்ருடின் இஷாக் கூறினார்.

இத்தொகுதியிலுள்ள 18 வாக்குச்சாவடிகள் காலை 8.00 மணி முதல்
மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும். குறைவான வாக்காளர்கள்
காரணமாக புக்கிட் பிரேசர் வாக்குச்சாவடி மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு
மூடப்படும் என அவர் தெரிவித்தார்.

கோல குபு பாரு, சமூக மண்டபத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில்
எற்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினார்.

வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் ஆபத்து ஏற்படும்
பட்சத்தில் விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக 50 தீயணைப்பு வீரர்கள்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கோல குபு பாரு தீயணைப்பு
மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் அல்பியான் மாஜூதி சொன்னார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு.
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.


Pengarang :