NATIONAL

கால்பந்து விளையாட்டாளர்கள் அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்தால் காவல்துறையில் புகார் அளிக்க அறிவுறுத்து

கோலாலம்பூர், மே 10: கால்பந்து வீரர்கள் தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால், உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்குமாறு காவல் கண்காணிப்பாளர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை மூன்று தேசிய கால்பந்து வீரர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விசாரணையை மேற்கொள்ள காவல் துறைக்கு உதவும் என ரஸாருடின் கூறினார்.

“நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கால்பந்து வீரரையும் காவல் துறையினர் கண்காணிக்க உண்மையில் முடியாது.

“எனவே, கால்பந்து வீரர்கள் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக காவல்துறை அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு நான் அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் கேட்டு கொண்டார்.

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயிலின் பரிந்துரை குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று ரஸாருடின் மீண்டும் எச்சரித்தார்.

“இது நல்லதல்ல, ஊகங்கள் வேண்டாம். ஏனென்றால் தாக்குதலுக்கான உண்மையான நோக்கத்தை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

சமூக வலைதளங்களில் வரும் அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் ஊகங்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்துவது சாத்தியமற்றது என்றும், ஆனால் ஏதேனும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :