NATIONAL

கே.கே.பி. தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் தக்க வைத்துக் கொள்ளும்- அமிருடின் நம்பிக்கை

உலு சிலாங்கூர், மே 10- நாளை நடைபெறவுள்ள இடைத் தேர்தலில்
கோல குபு பாரு தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று
சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நம்புகிறது.

கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பிரச்சாரத்தின் போது
தேர்தல் இயந்திரம் நடத்திய ஆய்வினை இந்த நம்பிக்கை அடிப்படையாக
கொண்டுள்ளது என்று மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.

நமது பிரச்சாரம் சிறப்பான முறையில் உள்ளது. விழுக்காட்டின்
அடிப்படையில் பார்க்கையில் கோல குபு பாரு தொகுதியை தக்க வைத்துக்
கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு தினமான நாளை பிற்பகலிலும் மாலையிலும் மழை பெய்யும்
என எதிர்பார்க்கப்படுவதால் காலையிலே வாக்களித்து விடும்படி
வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

கோல குபு பாரு மினி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற கோல குபு
பாரு இடைத் தேர்தலுக்கான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின்
மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று ஒவ்வொரு வாக்காளரையும் குறி
வைத்து இடைவிடாத பிரச்சாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல்
இயந்திரம் செயல்படும் எனவும் அவர் சொன்னார்.

ஒற்றுமை அரசின் வேட்பாளரான பாங் சோக் தாவின் வெற்றியை உறுதி
செய்ய தேர்தல் இயந்திரம் ஒன்றிணைந்து சிறப்பான முறையில்
சேவையாற்றி வருவது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்
கூறினார்.

தலைவர்களுக்கிடையிலான ஒற்றுமையின் வெளிப்பாடாக இது
அமைக்கிறது. ஒவ்வொரு கட்சியின் தங்களின் தேர்தல் இயந்திரத்திற்கு
தலைமை தாங்குகின்றன. இந்த முயற்சியை காண பெரும் மகிழ்ச்சியாக
உள்ளது என்றார் அவர்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு,
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவ், பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.


Pengarang :