NATIONAL

இஸ்ரேலின் முற்றுகை காரணமாக காஸாவில் மனிதாபிமான நெருக்கடி அதிகரிப்பு- ஐ.நா. கவலை

கோலாலம்பூர், மே 10 – இஸ்ரேலிய முற்றுகைக்கு மத்தியில் காஸாவில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

முக்கியமான  மற்றும் அத்தியாவசிய உதவிப் பொருள்களை பெறுவதிலிருந்து முற்றிலுமாக  துண்டிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தின் மோசமான சூழ்நிலையையும் காஸா மக்கள்  எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான அவலத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மூன்று நாட்களாக காஸாவிற்குள்  செல்ல அல்லது வெளியேற  யாரும் அனுமதிக்கப்படவில்லை. கடப்புப் பாதைகள்  மூடப்பட்டதால் எரிபொருள் விநியோகம் இல்லை.  லோரிகள் இல்லை, ஜெனரேட்டர்கள் இல்லை, தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை மற்றும் மக்கள் அல்லது பொருட்களின் இயக்கம் இல்லை என்பது இதன் பொருளாகும் என அவர் குறிப்பிட்டார்.

காஸாவில் பொதுமக்கள் பட்டினியால் உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதிலிருந்து நாங்கள் தடுக்கப்படுகிறோம் என்று க்ரிஃபித்ஸ் சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.

கடப்புப் பாதைகள் மூடப்பட்டதால் நிவாரணப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால்  உதவிகள் சென்றடையவில்லை. எங்களின் பொருட்கள் தேங்கியுள்ளதோடு  எங்கள் குழுவினரும் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுக்கும் தெற்கு காஸாவிற்கும் இடையே உள்ள முக்கிய கெரெம் ஷாலோம் கடப்புப் பாதையை இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை  மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வழியாகத்தான் பெரும்பாலான மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீன எல்லைக்குள் நுழைகின்றன.


Pengarang :