NATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல்- இந்திய சமூகம் தவறாது வாக்களிக்க வேண்டும்- டத்தோ ரமணன் வலியுறுத்து

உலு சிலாங்கூர், மே 10- நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கு கோல
குபு பாரு இடைத் தேர்தலில் பங்கேற்று வாக்கினைச் செலுத்துவதன்
மூலம் தங்களின் ஜனநாயகக் கடமையை பொறுப்புள்ள பிரஜைகள் என்ற
முறையில் நிறைவேற்றும்படி கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத்
துணைத் தலைவர் (1) டத்தோ ஆர். ரமணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற சில தரப்பினரின்
கோரிக்கைக்கு சமுதாயம் ஒருபோதும் செவிசாய்த்து விடக் கூடாது என்று
அவர் வலியுறுத்தினார்.

மலேசியர்கள் என்ற முறையில் நாம் ஒருவருரோடு ஒருவர் சமாதானமாக
வாழ முடியும். ஒற்றுமையாகவும் இருக்கிறோம். ஆனால், இதில்
வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால் நமது சொந்த சமூகத்தில், ஒரே
இனத்தில் (இந்தியர்கள்) உள்ளவர்கள் பிரிவினையை உருவாக்கப்
பார்க்கிறார்கள். இது ஏமாற்றமளிப்பதாகவும் அருவருக்கத்தக்கதாகவும்
உள்ளது என்று அவர் சொன்னார்.

தேசிய தொழில்முனைவோர் குழுவின் (தெக்குன் நேஷனல்) இந்திய சமூக
நிதி திறனளிப்புத் திட்டம் (ஸ்பூமி கோஸ் பிக்) மீதான விளக்கமளிப்பு
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டிற்குக் கூடுதலாக 3
கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்பூமி கேஸ்
பிக் திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் வாய்ப்புகளை முறையாகப்
பயன்படுத்திக் கொள்ளும்படி இந்திய சமூகத்தை தொழில் முனைவோர்
மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சருமான ரமணன்
கேட்டுக் கொண்டார்.

இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கப்பட்டது முதல்
இதுவரை 21 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,
அவற்றில் ஆறு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு மொத்தம் 250,000
வெள்ளி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Pengarang :