NATIONAL

பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி போலி மருந்துகள் விற்பனை- பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

கோலாலம்பூர், மே 20- சமூக ஊடகங்களின் பிரபலமானவர்களின் படங்களைப் பயன்படுத்தி போலி மருந்துகளை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்படுவதாக இணையம் வாயிலாக மருத்துவப் பொருட்களை வாங்கும் போது மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும் படி பொதுமக்களை காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய விளம்பரத் தந்திரங்கள் பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதோடு அந்த மருத்துவப் பொருட்களை சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தயாரிப்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை டத்தோ ஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

இதன் தொடர்பில் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் மருத்துவ நிபுணர் ஒருவரிடமிருந்து  தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக கூறிய அவர், பயனீட்டாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என அஞ்சப்படும் மருந்துகள் பிரபலப்படுத்துவதற்காகத் தனது பெயரும் தனது நிறுவனத்தின் பெயரும் முன் அனுமதியின்றி பயன்படுத்தப் பட்டுள்ளதாக அந்த மருத்துவ நிபுணர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்றார்.

பொது மக்களை குழப்பும் மற்றும் அவர்கள் கவர்ந்திழுக்கும் நோக்கில் மருத்துவப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்பதோடு அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றமாகும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இணையம் அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக மருத்துவப் பொருள்களை வாங்க விரும்புவோர் அதன் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் உரிய தகவல்களைப் பெறும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :