NATIONAL

சீபூத்தே எம்.பி. தெரேசா கோக்கிற்குக் கொலை மிரட்டல்-  போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், மே 20 –  மிரட்டல் கடிதம் கிடைத்தது  குறித்து சீபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் சூ சிம்மிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதைக்  காவல்துறை உறுதி செய்துள்ளது.

அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு  அனுப்பப்பட்ட கடித உறையில் ஒரு எச்சரிக்கைக் குறிப்பும் இரண்டு தோட்டாக்களும் இருந்தது தொடக்க விசாரணையில்  கண்டறியப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.

இது குறித்து விசாரணை  நடைபெற்று வருகிறது. இது ஒரு கடுமையான  விஷயம் என்பதால்  விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில்  ஆருடங்களை வெளியிட  வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

அநாமதேய தகவல்தொடர்பு மூலம் குற்றவியல் மிரட்டல் விடுத்தது தொடர்பில்  குற்றவியல் சட்டத்தின்  507 பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது  என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 03-2115 9999 என்ற எண்ணில் கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களைத்  தொடர்பு கொள்ளுமாறு  அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, தாம் வீடு திரும்பிய போது  தனது அஞ்சல் பெட்டியில் அந்த மிரட்டல் கடிதத்தை கண்டதாகக் கோக் தனது முகநூல் பதிவில்  கூறினார்.

அந்த கடித உறையைத் திறந்தபோது அதில்  வெள்ளை நிற ஏ4 அளவிலான காகிதத்தில் இரண்டு தோட்டாக்களையும் ஒரு எச்சரிக்கைக் குறிப்பையும் கண்டேன்.

பின்னர், பெட்டாலிங் காவல் நிலையத்தில் புகார் அளித்து காவல்துறையினரிடம் கடிதத்தையும் தோட்டாக்களையும்   ஒப்படைத்தேன் என்றார் அவர்.

எனது ஆடம்பர  அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அஞ்சல் பெட்டி பகுதியைக் காவல் துறையினர்  ஆய்வு செய்தனர்  என்று அவர் கூறினார்.

காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், இந்த  வழக்கை கையாளும் அவர்களின் திறனில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இதனிடையே, நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதை  ஒற்றுமை அரசாங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இதுபோன்ற வெட்கக்கேடான செயல்கள் அரசாங்க ஆதரவு  நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களாக  இருந்தாலும் யார் மீதும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று ஒற்றுமை அரசின் பேச்சாளரான ஃபாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.


Pengarang :