NATIONAL

போலீஸ்காரர்கள் போல் நடித்து மியன்மார் பிரஜைகளிடம் கொள்ளை- அரசு ஊழியர் உட்பட நால்வர் கைது

கோத்தா பாரு, மே 20- போலீஸ்காரர்கள் போல் நடித்து எட்டு மியன்மார் பிரஜைகளிடம் கொள்ளையிட்டதாகச் சந்தேகிக்கப்படும் அரசு ஊழியர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் இங்குள்ள மெலோர், கம்போங் குபாங் டின்னில் நேற்றிரவு 10.30 மணியளவில் நிகழ்ந்ததாக கோத்தா பாரு மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் வான் ருசாய்லான் மாட் ரூசோப் கூறினார்.

வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த எட்டு மியன்மார் பிரஜைகளையும் வழி மறித்த நான்கு உள்நாட்டு ஆடவர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என கூறிக் கொண்டதோடு அந்த அந்நிய நாட்டினரிடமிருந்த பணப்பை, கைபேசிகள், ஐ.நா.வின் அகதிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடியதாக  அவர் சொன்னார்.

கொள்ளையடிக்கப்பட்ட அந்த எட்டு மியன்மார் பிரஜைகளும் 20 வயது மதிக்கத்தக்க அவர்கள் என்றும் கடந்த 13 ஆண்டுகளாக மலேசியாவில் தங்கியிருக்கும் அவர்கள் கோத்தா பாரு வட்டாரத்தில் கூலி வேலை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைக்கப் பெற்றத்தைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் நேற்றிரவு 11.00 மணியளவில் கம்போங் குபாங் டின் சாலையோரம் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேகப் பேர்வழிகளையும் கைது செய்தனர் என்றார் அவர்.

மேலும், அவர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், கவசத் தொப்பி மற்றும் கணிசமானத் தொகை கைப்பற்றப்பட்டது என அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட 29 முதல் 43 வயதுக்குட்பட்ட அந்த நால்வரும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 395 மற்றும் 170 பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Pengarang :