ECONOMY

நிர்வாக பலவீனங்கள், ஊழல் பிரச்சினைகளை விரைந்து களைய பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், மே  22- நாட்டின் பொருளாதார வலிமையை பலவீனப்படுத்தும் கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னதாக பலவீனமான நிர்வாகம் மற்றும் திட்டமிடப்பட்ட  பரவலான ஊழல் ஆகியவை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகளாகும்  என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி  மக்களின் மன உறுதியும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் புற்றுநோயாக இந்த பிரச்சனை விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படுவதற்கு முன்பே கமிஷன் வசூலிக்க விரும்பும் சில கும்பல்களின் தொந்தரவால்  ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் பெருகி மக்களுக்கு  சுமையை ஏற்படுத்துகிறது என்று நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய நேரடி உரையில் அவர் தெரிவித்தார்.

அரசு கொள்முதலில் பேரம் பேசப்பட்ட  டெண்டர் எனப்படும் நேரடிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு வெளிப்படையான டெண்டர் முறைக்கு மாற வேண்டும் என்று முதல் ஆண்டே வலியுறுத்தினேன் என்று அவர் கூறினார்.

மந்தமான வணிக சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மத்திய அரசின் பலவீனமான நிதி நிலை ஆகியவை  நாட்டின் பொருளாதாரத்தின் வலிமையை பலவீனப்படுத்தும்  கட்டமைப்பு சிக்கல்கள் ஆகும் என்றார் அவர்.

ஊழல்வாதிகளை தண்டிப்பது குறித்து பேசிய அவர், அதன் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு  சட்டப்பூர்வமான வழிகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

எனவே, அரச மலேசிய காவல்துறை,  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் தேசிய தணிக்கைத் துறை போன்ற அமலாக்க நிறுவனங்கள் உறுதியுடன் செயல்படுவதற்கு அரசாங்கம் முழு அதிகாரத்தை  வழங்குகிறது என்று அவர் சொன்னார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நடைமுறை (ஊழல்) விரைந்து நிறுத்தப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்த கால அவகாசம் பிடிக்கும். சில நேரங்களில் சோர்வு ஏற்படும்.  செல்வத்தை பதுக்கி வைக்கும் கடந்த கால நடைமுறைக்கு  ஏன் தீர்வு காணப்படவில்லை  என்று பலரைப் போலவே நானும் பொறுமையிழந்து இருக்கிறேன்  அவர் கூறினார்.

இந்த ஊழல் ஒழிப்பு முயற்சியை சிலர் சிறுமைப்படுத்தி, வெற்று  அரசியல் முழக்கம் என்று கூறினாலும்  தொடர்ந்து உறுதியாக போராடுவதன் மூலம் ஊழல் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்தார்.


Pengarang :