NATIONAL

பிரதமர் அன்வார் ஜப்பானுக்கு மூன்று நாள் பணி நிமித்தப் பயணம்

தோக்கியோ, மே 23- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று நாள்  பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு நேற்று மாலை ஜப்பான் வந்தடைந்தார்.

அன்வார் பயணம் செய்த பிரத்தியேக விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு (மலேசிய நேரப்படி இரவு 8.00 மணி) ஹனேடா அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.

அன்வாரின் பயணக் குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹாசன், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ், மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விமான நிலையத்தில் அன்வாரை  ஜப்பானின் வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற துணை அமைச்சர் யாசுஷி ஹோசாகா மற்றும் மலேசியாவுக்கான ஜப்பானிய தூதர் கட்சுஹிகோ தகாஹாஷி,  ஜப்பானுக்கான மலேசியத் தூதர் டத்தோ ஷஹாரில் எஃபெண்டி அப்துல் கானி ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு  நடைபெறும் “ஆசியாவின் எதிர்காலம்” என்பது மீதான   29வது சர்வதேச மாநாட்டில்  (நிக்கேய் மாநாடு) கலந்து கொள்ள அன்வார் இப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக  ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்திக்கவிருக்கும் அன்வார்,  தொழில்துறை தலைவர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடல்களிலும் பங்கேற்பார்

ஜப்பான் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக மலேசியாவின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் ஜப்பான் இடையிலான மொத்த வர்த்தகம் 15, 664 கோடி வெள்ளியாக  இருந்தது.


Pengarang :