ANTARABANGSA

ஹிலிர் பேராக்கில் 209 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

ஈப்போ, மே 23- நேற்றிரவு பெய்த அடை மழையைத் தொடர்ந்து ஹிலிர் பேராக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 73 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கம் நாடினர்.

இன்று காலை 8.00 மணி நிலவரப்படி பாரிட், சிம்பாங் 3, தேசிய பள்ளியில் ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டு கம்போங் செராப்போ மற்றும் கம்போங் பூலோ ஆக்கார் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

கடந்த வாரம் ஹிலிர்  பேராக், தைப்பிங் மற்றும் கோல கங்சார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் 10 துயர் துடைப்பு மையங்களில் சுமார் ஒரு வாரத்திற்கு தங்கியிருந்தனர்.

நேற்றிரவு பெய்த கனத்த மழையின் காரணமாக மஞ்சோங், லஹாட் மற்றும் ஈப்போ ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :