SELANGOR

புட்சால் திடலை சீரமைக்க ரவாங் சட்டமன்ற உறுப்பினர் வெ.20,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், மே 23- ரவாங், காரிங் உத்தாமாவில் உள்ள புட்சால் திடலை சீரமைக்க ரவாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் 20,000 20,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

வட்டார  பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் அந்த திடலைப் பார்வையிட்டப் பின்னர் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் அந்த புனரமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தாம் நிதி ஒதுக்கீடு செய்ததாக அவர் சொன்னார்.

அந்த களப் பயணத்தின் போது சம்பந்தப்பட்ட புட்சால் திடலின் கட்டமைப்பு நல்ல நிலையில் இருப்பதைக் கண்டேன். எனினும், பந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுதைத் தடுப்பதற்கு ஏதுவாக திடலிலுள்ள வலை மற்றும் அதன் வேலியை சரி செய்வது போன்ற பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.

பொது மக்கள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் சௌகர்யமான முறையில் மேற்கொள்ளும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் படுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். புட்சால் திடல் சீரமைப்புத் தவிர்த்து அப்பகுதியிலுள்ள கூடைப்பந்து மைதானத்தை பழுது பார்ப்பது மற்றும் நிலைக் காற்றாடி அமைப்பது போன்ற பணிகளையும் மேற் கொள்ளவுள்ளோம் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

பொது வசதிகளை மேம்படுத்துவதற்கும் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கும் 2 கோடியே 40 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அறிவித்திருந்தார்.

இந்த நிதியில் ஒரு கோடி வெள்ளித் தொகை 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மலிவு மற்றும் நடுத்தர விலை வீடுகளை பழுதுபார்த்து வர்ணம் பூசுவதற்கு பயன்படுத்தப்படும் என அவர் கூறியிருந்தார்.

எஞ்சிய ஒரு கோடியே 40 லட்சம் வெள்ளி அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தலா 250,000 வெள்ளி வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.


Pengarang :