SELANGOR

100 நாட்களில் 30 க்கும் மேற்பட்ட திட்டங்களை பெ.ஜெயா மாநகர் மன்றம் நிறைவேற்றியது

பெட்டாலிங் ஜெயா, மே 23-  இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதி தொடங்கி மே 10 வரையிலான காலக்கட்டத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் 82 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட திட்டப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

அக்காலக்கட்டத்தில் மொத்தம் உள்ள 56 திட்டங்களில் 31 பூர்த்தியடைந்துள்ள வேளையில் மேலும் 25 திட்டங்கள் அட்டவணைப்படி கண்காணிக்கப்பட்டு வருவதாக முகமது ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

பூர்த்தியடைந்த முக்கியத் திட்டங்களில் சிஸ்டம் ஸ்மார்ட் பில்போர்ட், ஜாலினான் காசே 3ஆர் பிஜே கித்தா திட்டம், கஸ்டமர் பீட்பேக் சிஸ்டம், எம்.பி.பி.ஜே. புத்தாக்க செயல் திட்டம் உள்ளிட்டவையும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் பிஜே சிட்டி ஃபூட் வேலி, போட்காஸ்ட் பிஜே கித்தா, பெட்டாலிங் ஜெயா மூத்த குடிமக்கள் செயல்திட்டம், பெட்டாலிங் ஜெயா போக்குவரத்து பெருந்திட்டம் ஆகியவை அட்டவணைப்படி கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

டத்தோ பண்டாராக பதவியேற்று 100 நாள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இன்று இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

திட்டங்களின் அமலாக்கம் தொடர்பான அளவீடுகள் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் நான்கு அடிப்படை கூறுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.


Pengarang :