ECONOMY

ஜப்பானிடமிருந்து வெ.145 கோடி முதலீடு, வெ.55 கோடி ஏற்றுமதி வாய்ப்புகள் பதிவு

தோக்கியோ, மே 24- ஜப்பானிலிருந்து 145 கோடியே வெள்ளி முதலீடு மற்றும் 55 கோடி வெள்ளி ஏற்றுமதி வாய்ப்புகளை மலேசியா பெற்றுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும தொழிலியல் அமைச்சு கூறியது. கடந்த மே 22 முதல் 24 வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜப்பானுக்கு மேற்கொண்ட குறுகிய கால வருகையின் போது அந்நாட்டு நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் விளைவாக இந்த முதலீட்டு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் பெறப்பட்டன.

இந்த முதலீட்டின் வாயிலாக சில திட்டங்கள் அடுத்த மூன்றாண்டுகளில் அமல்படுத்தப்படும் என்றும் இதன் வழி செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமைத் தொழில் நுட்பத் துறைகளில் வலுவான சூழியல் முறையை உருவாக்க இயலும் என்று அமைச்சு கூறியது.

மேலும், அவற்றில் சில திட்டங்கள் வரும் 2050ஆம் ஆண்டுவாக்கில் கார்பன் வெளியேற்றத்தை  சுழியம் அளவுக்கு குறைக்கும் இலக்கை மலேசியா அடைவதற்கான உந்து சக்தியாகவும் விளங்கும் என அது குறிப்பிட்டது.

பிரதமரின் இந்த பயணத்தின் போது தொழிலியல் அமைச்சுடன் சந்திப்பு நடத்திய நிறுவனங்களில் ஐ.எச்.ஐ. கார்ப்ரேஷன், நிஷின் ஒய்லியோ குழுமம், தாக்குயுமா கார்ப்ரேஷன், சுமிதோமோ கார்ப்ரேஷன், இனோஸ் ஹோல்டிங்ஸ், மிட்ஸிபிட்ஷி கார்ப்ரேஷன் மற்றும் தோக்கியோ கேஸ் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.

குறுகிய கால பயணமாக இருந்தாலும் அதிக பயனை அதாவது 145 கோடி வெள்ளி  முதலீடு மற்றும் 55 கோடி வெள்ளி ஏற்றுமதி வாயப்புகளை பெற்றது குறித்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம் என்று அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ் அறிக்கை ஒன்றில் கூறினார்.


Pengarang :