தாமான் தாசேக் ஷா ஆலமில் 2024 தேசிய நிலவடிவமைப்புத் தினத்தை பேரரசர் தொடக்கிவைத்தார்

ஷா ஆலம், மே 25- இவ்வாண்டிற்கான தேசிய நில வடிவமைப்பு தினத்தை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று இங்குள்ள தாமான் தாசேக் ஷா ஆலமில் தொடக்கி வைத்தார்.

மேன்மை தங்கிய துங்கு துன் அமினா சுல்தான் இப்ராஹிம் மற்றும் அவரின் கணவர் டதோ டேனியல் முகமது அப்துல்லா ஆகியோரும் மாமன்னருடன் உடன் வந்தனர்.

அரச குடும்பத்தினரை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங், துணையமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு மற்றும் சிலாங்கூர் மந்திரி   புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் வீடமைப்பு மற்றும் கலாசாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா, பொது சுகாதாரத் துறைக்கான ஆடசிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இந்நிகழ்வில் தொடக்க உரையாற்றிய அமைச்சர் ங்கா, தேசிய நில வடிவமைப்பு ஒருங்கமைப்பு முறையை தேசிய நில வடிவமைப்புத் துறை தீவிரமாக மேம்படுத்தி  வருவதாகக் குறிப்பிட்டார்.

மூன்றாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போது மாட்சிமை தங்கிய பேரரசர் கூறியது போல் நடப்புத் தேவைகளுக்கு ஏற்ப நிலையான பொருளாதாரத்துடன் நாட்டின் போட்டியிடும் ஆற்றலை  மேம்படுத்துவதற்காக புதுப்பிக்கத் தக்க நிகழ்ச்சி நிரலின் அமலாக்கம் மூலம் ஆக்ககரமான அணுகுமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் நிலவடிவமைப்பை புதிய பொருளாதார வளமாக மாற்றுவதற்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் வியூகத் திட்டம்  இலக்குகளை நிர்ணயித்துள்ளது என அவர் சொன்னார். 


Pengarang :