NATIONAL

செராஸ் அரங்கின் வெளியே களேபரம்- சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

கோலாலம்பூர், மே 27- இங்குள்ள செராஸ் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற கோலாலம்பூர் சிட்டி மற்றும் ஜோகூர் தாக்சிம் எஃப்.சி. (ஜே.டி.டி.) குழுக்களுக்கிடையிலான சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கு பிறகு  நிகழ்ந்த களேபரம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

அந்த விளையாட்டு முடிவுக்கு வந்தப் பின்னர் அரங்கிற்கு வெளியே கும்பல் ஒன்று பொருள்களையும் பட்டாசுகளையும் வீசிக் கொள்வதை சித்தரிக்கும் யூடியூப்பில் வெளியான  4 நிமிடம் 42 விநாடி காணொளி தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரவீந்தர் சிங் சர்பான் சிங் கூறினார்.

இந்த சம்பவத்தின் போது தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பில் உள்நாட்டு ஆடவரிடமிருந்து தாங்கள் புகார் ஒன்றைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த களேபரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த வன்செயல் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 03-92845050/5051 என்ற எண்களில் செராஸ் போலீஸ் தலைமையகம் அல்லது 03-21159999 என்ற எண்களில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகம் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் அளிக்கும்படி அவர் கேட்டுக கொண்டார்.


Pengarang :