NATIONAL

லோரியில் உபரி டாங்கி பொருத்தி மானிய விலை டீசல் மோசடி- ஓட்டுநர் கைது

புத்ராஜெயா, மே 29- லோரியில் கூடுதலாக டாங்கியை அமைப்பதன் மூலம் மானிய விலை டீசலைக் கடத்தும் நடவடிக்கையை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

பேராக் மாநிலத்தின் ஈப்போவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் திரிஸ் 3.0 என்ற அதிரடிச் சோதனையில் இந்த டீசல் மோசடி அம்பலத்திற்கு வந்ததாக அமைச்சின் அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னான் கூறினார்.

அந்த ஓப்ஸ் திரிஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈப்போவிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் கண்காணிப்பை மேற்கொண்ட அமலாக்க அதிகாரிகள் அங்கு லோரி ஒன்று வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரத்திற்கு எண்ணெய் நிரப்பிக் கொண்டிருப்பதைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.

லோரியில் கூடுதலாக டாங்கி பொருத்துவதன் மூலம் பல பெட்ரோல் நிலையங்களில் டீசலை நிரப்பி அதனை ஓரிடத்தில் சேகரித்து பின்னர் கருப்புச் சந்தையில் விற்பனை  செய்வது இந்த மோசடிக் கும்பலின் பாணியாகும் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

 அந்த லோரியைச் சோதனை செய்ததில் அதில் 1,700 லிட்டர் டீசல் நிரப்பப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. லோரியின் பொருட்கள் வைக்கும் இடத்தில் கூடுதலாக டாங்கி பொருத்தப்பட்டு லோரியின் அசல் டாங்கியுடன் இணைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்தனர் என்றார் அவர்.

அந்த லோரியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் டீசல் நிரப்பப்பட்ட உபரி டாங்கி, ரப்பர் குழாய், மோட்டார் பம்ப், ஆவணங்கள் உள்ளிட்ட 23,655 வெள்ளி மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றினர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த லோரி ஓட்டுநரான 41 வயது உள்நாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டு 1961ஆம் ஆண்ட விநியோக க் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :