SELANGOR

புதிய மதிப்பீட்டு வரி விகிதம்- மே 31 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவிக்கலாம்

ஷா ஆலம், மே 29- செலாயாங் நகராண்மைக் கழகம் மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்திடமிருந்து உத்தேச வரி உயர்வு மதிப்பீட்டுக்கான  அறிவிப்பை பெற்ற குடியிருப்பாளர்கள் வரும் மே 31 ஆம் தேதிக்குள் தங்களின் ஆட்சேபத்தை தெரிவிக்கலாம்.

அந்த அறிக்கையில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது செலாயாங் நகராண்மைக் கழகத்தின் அகப்பக்கத்தில் உள்ள ஆட்சேப மனுவை பதிவிறக்கம் செய்வதன் மூலம் வரும் மே 31 ஆம் தேதிக்கு முன்பாக தங்களின் ஆட்சேபங்களை பொது மக்கள் அனுப்பலாம் என்று நகராண்மைக் கழகத்தின் வர்த்தகத் துறை இயக்குநர் முகமது ஜின் மாசூட் கூறினார்.

நிர்வாக மற்றும் சேவைச் செலவினமும் நடப்பு மதிப்பீட்டு வரி விகிதமும் சீராக இருப்பதை உறுதி செய்ய இந்த மதிப்பீட்டு வரி மறு ஆய்வு செய்யப் படுவது அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.

நடப்பிலுள்ள செலாயாங் நகராண்மைக் கழகத்தின் மதிப்பீட்டு பட்டியல் 1992ஆம் ஆண்டு அதாவது 33 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டதாகும். ஆனால் செலவினம் நடப்பு சூழலுக்கு ஏற்றதாக உள்ளது என்றார் அவர்.

வருமானம் குறைவாக இருக்கும் நிலையில் நடப்பு செலவினங்களின் அடிப்படையில் சேவைக்கு உண்டாகும் செலவினத்தை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் நகராண்மைக் கழகம் உள்ளது. இதன் காரணமாக சேவைத் தரத்தை உயர்த்த முடியாத நிலை உள்ளது என்று அவர் சொன்னார்.

இதனிடையே, தற்போது தாங்கள் அமல்படுத்தி வரும் மதிப்பீட்டு வரி விகிதம் 1997ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும் என்று அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அண்மையில் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அம்பாங் ஜெயாவிலுள்ள 181,144 சொத்து உரிமையாளர்களுக்கு புதிய மதிப்பீட்டு வரி பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 85,646 தரை குடியிருப்புகளையும் எஞ்சியவை அடுக்குமாடி குடியிருப்புகளையும் உள்ளடக்கியுள்ளன என்று அது கூறியது.

முன்பு  200 வெள்ளி வரி வசூலிக்கப்ப்பட்ட இடத்தில் புதிய வரியாக இனி 250 வெள்ளி வசூலிக்கப்படும். 50.00 வெள்ளி உயர்வை இது பிரதிபலிக்கிறது என நகராண்மைக் கழகத்தின் அந்த அறிக்கை குறிப்பிட்டது


Pengarang :