NATIONAL

கடந்தாண்டு சிலாங்கூருக்கு வருகை புரிந்த சுற்றுப்பயணிகளில் பாதி பேர் ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள்

ஷா ஆலம், ஜூன் 5 – எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 70 லட்சம் சுற்றுப் பயணிகளை வரவேற்பதற்கு ஏதுவாக சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க சிலாங்கூர் மாநில அரசு தயாராகி வருகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டில் இம்மாநிலம் 65 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுப்பயணிகளை ஈர்த்தது. அவர்களில் 44 லட்சத்து 10 ஆயிரம் பேர் வெளிநாட்டில் இருந்தும் எஞ்சியோர் வெளிநாடுகளிலிருந்தும் மாநிலத்திற்கு வருகை தந்தனர்.

தங்கிக் பொழுதைக் கழிக்கும் சுற்றுப்பயணிகள் என உலக சுற்றுலா நிறுவனம் வரையறுத்துள்ள நிர்ணயிக்கப்பட்ட  நெறிமுறைகளுக்கேற்ப டூரிசம் சிலாங்கூர் இந்த தரவுகளைச் சேகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023ஆம் ஆண்டில் சுற்றுபயணிகள் எண்ணிக்கை 45.4 விழுக்காடு அதிகரித்துள்ளதை தரவுகள் காட்டுகின்றன. 50 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இலக்கை தாண்டி விட்டதை இது குறிக்கிறது.

பிரசித்தி பெற்ற சுற்றுலா மையம் என்ற சிலாங்கூரின் தோற்றத்தை இது உறுதிப்படுத்துவதோடு சூழியல் சுற்றுலா, தீம் பார்க் எனப்படும் நீர் பொழுதுபோக்கு பூங்காக்கள், உணவுச் சுற்றுலா, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்தும் வியூகங்கள் தக்க பலனைத் தந்துள்ளதை காட்டுகிறது என டூரிசம் சிலாங்கூர் அறிக்கை ஒன்றில் கூறியது-

சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சிலாங்கூருக்கு வருகை புரிந்த அனைத்துலகச் சுற்றுப்பயணிகளாக விளங்குகின்றனர். அனைத்துலகச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையில் இவர்கள் 46 விழுக்காடாக உள்ளனர்.

அதே சமயம், கோலாலம்பூர், ஜோகூர், பேராக், பகாங் மற்றும் பினாங்கைச் சேர்ந்தவர்கள் மாநிலத்திற்கு அதிகம் வருகை புரிந்த  உள்நாட்டினராக விளங்குகின்றனர். உள்நாட்டு சுற்றுப்பயணிகள் பிரிவில் இவர்கள் 36 விழுக்காட்டை பிரதி நிதிக்கின்றனர்.

ஊராட்சி மன்றங்களைப் பொறுத்த வரை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மிக அதிகமாக அதாவது 21 லட்சத்து 15 ஆயிரம் சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளது.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகப் பகுதிக்கு வருகைப் புரிந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 358 விழுக்காடு அளவுக்கு மிக அபரிமித வளர்ச்சியைக் கண்டுள்ளது. அந்த ஊராட்சி மன்றப் பகுதிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு 16,920 சுற்றுப்பயணிகள் வருகை புரிந்த வேளையில் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 7,521ஆக அதிகரித்தது.


Pengarang :