SELANGOR

2024 தேசிய திவேட் தினத்தில் வேலை வாய்ப்பு, தொழில்நுட்ப கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

பந்திங், ஜூன் 6- இவ்வாண்டிற்கான தேசிய திவேட் தினம் கோல லங்காட், தொழிலியல் பயிற்சிக் கழகத்தில் நாளை தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன்  (திவேட்) தொடர்பான கல்வி மற்றும் பயிற்சிகள், கண்காட்சி மற்றும் இதர நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திவேட் கல்விக் கழகங்களின் தொழில்நுட்ப படைப்புகள், மின்சார வாகனம், வான் போக்குவரத்து தொடர்பான படைப்புகள் மற்றும் கண்காட்சிகளும் 3,000 பேர் வேலை பெறுவதற்குரிய  வேலை வாய்ப்புச் சந்தையும் சிறப்பு அங்கங்களாக இடம் பெறும் என்று தேசிய திவேட்  மன்றச் செயலகத்தின் தலைவர் டாக்டர் முகமது ஃபைசால் தோக்கேரான் கூறினார்.

இந்த தேசிய தினத்தில் சுமார் 15,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், இந்த நிகழ்வு திவேட் கண்காட்சி, திவேட் கருத்தரங்கு, திவேட் வேலை வாய்ப்புச் சந்தை, திவேட் தொழில் முனைவோர் மற்றும் திவேட் சவால் என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் வாயிலாக திவேட் துறை தொடர்பான பல்வேறு தகவல்களைப் பொது மக்கள் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்பதோடு இளையோர் தங்கள் எதிர்காலக் கல்வியை முடிவு செய்வதற்கு ஏதுவாக திவேட் கல்வியை முடித்தவர்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் சிறப்பு அங்கம் என்னவென்றால் திவேட் திட்டத்தை அமல்படுத்தும் 12 அமைச்சுகளும் இதில் பங்கேற்கின்றன. ஆகவே, மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் பங்கேற்று பயன் பெறுவதற்குரிய வாய்ப்பினை நழுவ விட வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.


Pengarang :