SELANGOR

சொத்து உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் அமர்வு விரைவில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 6: ஜூன் 14 சொத்துடமையாளர்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் காலம் முடிந்த பிறகு ஷா ஆலம் மாநகராட்சியின் (எம்பிஎஸ்ஏ) நிர்வாகப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் உடன் கலந்துரையாடல் அமர்வு நடைபெறும்.

கடந்த 19 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரி அதிகரிக்கப்படவில்லை என்று விளக்கிய அதன் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம், புதிய விகிதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களை சந்திக்க எம்பிஎஸ்ஏ தயாராக உள்ளது என்றார்.

“மதிப்பீட்டு வரியை அதிகரிக்க எந்த கட்டாயமும் இல்லை, ஆனால் உண்மையில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க எம்பிஎஸ் வலுவான நிதியை கொண்டிருக்க வேண்டும்.

“இந்த உயர்வு பழைய வரியில் 25 சதவீதத்திற்கு மேல் இல்லை, ஆனால், நாங்கள் அவர்களின் ஆட்சேபனையை கவனத்தில் கொண்டு, அவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின் இறுதி முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

மே 9 முதல் நேற்று வரை சொத்து உரிமையாளர்களிடமிருந்து 1,990 எதிர்ப்பு புகார்களைப் பெற்றதாக எம்பிஎஸ்ஏ தெரிவித்தது.

முன்னதாக, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் புதிய விகிதத்தில் வரி வசூலிக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரசபையின் நிர்வாகப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு எம்பிஎஸ்ஏ அறிவிப்பு செய்தது.

குடியிருப்பு, வணிகம், தொழில்துறை மற்றும் காலி நிலம் (விவசாயம்) என அனைத்து சொத்து வகைகளையும் உள்ளடக்கிய பழைய வரியில் 25 சதவீதத்துக்கு மேல் புதிய வரி வசூலிக்கப் படாது.

வழிபாட்டு தளங்கள், பள்ளிகள் மற்றும் இலாப நோக்கம் அற்ற பொது வளாகங்கள் வரி விலக்குகள் பெறுகின்றன.


Pengarang :