NATIONAL

அம்ரிட்ஸார்- கோலாலம்பூர் இடையிலான பயணச் சேவை அதிகரிப்பு- மலேசியன் ஏர்லைன்ஸ் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 7- கோலாலம்பூருக்கும் இந்தியாவின் அம்ரிட்ஸார் நகருக்கும் இடையிலான பயணச் சேவையை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம்  வாரத்திற்கு நான்கிலிருந்து எட்டாக அதிகரிக்கவுள்ளது.

அந்த தடத்தில் பயணச் சேவைக்கான தேவை அதிகரிப்பு மற்றும் நேர்மறையான அடைவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் முதல் தேதி தொடங்கி இந்த சேவை அதிகரிப்பு அமலுக்கு வருவதாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.

அம்ரிட்ஸார் நகருக்கான பயணச் சேவை வாரம் ஏழு முறையாக அதிகரிக்கப் பட்டததை தொடர்ந்து இந்திய நகரங்களுக்கான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வாராந்திர பயணச் சேவை 71ஆக அதிகரித்துள்ளது என்று அது தெரிவித்தது.

முன்பு வாரம் இரண்டு முறையாக இருந்த அந்நகருக்கான பயணச் சேவையை வாரம் நான்கு முறையாக  கடந்த ஜனவரி மாதம் அதிகரித்த நிலையில் அந்த தடம் சம்பந்தப்பட்ட சந்தையின் வளர்ச்சி மீது கொண்டுள்ள நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது அந்த விமான நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

அம்ரிட்ஸார் நகருக்கான விமானச் சேவையை மலேசியன் ஏர்லைன்ஸ் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கியது. அந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அஹ்மதபாத் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட மூன்று தடங்களில் இதுவும் ஒன்றாகும்.

திருவனந்தபுரத்திற்கான பயணச் சேவையை மலேசியன் ஏர்லைன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி தொடங்கி வாரம் நான்கு முறையாக  அதிகரித்தது.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிக விரிவான பயண ஒருங்கமைப்பைக் கொண்டுள்ளது. புதுடில்லி, மும்பை, பெங்களுரு, சென்னை, ஹைதரபாத், கொச்சி, அஹ்மதபாத், அம்ரிட்ஸார், திருவனந்தபுரம் ஆகிய ஒன்பது முக்கிய நகரங்களுக்கு அது விமான சேவையை மேற்கொள்கிறது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் வர்த்தக வியூகத்தில் இந்தியா வலுவான அடித்தளமாக விளங்கி வருவதாக அந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைமை அதிகாரி தர்ஷசென்ஷ் அரிசந்திரன் கூறினார்.


Pengarang :