ANTARABANGSA

ஐ.நா.வின் சிறார்களுக்கு எதிரான குற்றவாளிகள் பட்டியலில் இஸ்ரேல் சேர்ப்பு

நியுயார்க், ஜூன் 8- கடந்த 2023ஆம் ஆண்டில் சிறார்களுக்கு எதிரான அத்துமீறல்களில் ஈடுபட்ட அனைத்துலக குற்றவாளிகள் பட்டியலில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்ரர்ஸ் இஸ்ரேலையும் சேர்த்துள்ளார் என்று ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டன் கூறினார்.

இந்த பட்டியலில் ஹமாஸ் இயக்கமும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாட் அமைப்பும் சேர்க்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

ஐ.நா.வின் இந்த முடிவு குறித்து தமக்கு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாக எர்டன் சொன்னார். சிறார் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான அறிக்கையில் இடம் பெற்றுள்ள இந்த உலக பட்டியலை குட்ரர்ஸ் வரும் ஜூன் 14ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

கொலை மற்றும் ஊனப்படுத்துதல், பாலியல் வன்முறை, கடத்தல், ஆள்சேர்ப்பு மற்றும் பயன்படுத்துதல், உதவிகள் கிடைப்பதை தடுத்தல், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் ஆகிய ஆறு குற்றங்களை  ஹமாஸ், பாலஸ்தீன ஜிஹாட் அமைப்பு மற்றும் இஸ்ரேல் புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் இந்த முடிவு ஐ.நா.வுடனான இஸ்ரேலின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காட்ஸ் கூறினார்.

ஐ.நா.வுடன் இஸ்ரேல் கொண்டிருந்த நீண்ட கால நட்பு காஸா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து மோசமடைந்தது.

கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் போரில் ஹமாஸ் வசமுள்ள காஸாவில் 7,797 சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. கடந்த மாதம் கூறியிருந்தது. காஸா சுகாதார அமைச்சினால் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை வெளியிடப்படுவதாக அந்த அமைப்பு கூறியது. எனினும் 15,500 சிறார்கள் கொல்லப்பட்டதாக காஸா அரசாங்கம் ஊடக அலுவலகம் தெரிவித்தது. 


Pengarang :