SELANGOR

சுல்தான் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு மாநில அரசு சார்பில் வெ.10 லட்சம் நன்கொடை

கிள்ளான், ஜூன் 11- எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி மெர்டேக்கா
அரங்கில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சுல்தான் கிண்ண கால்பந்து
போட்டிக்கு மாநில அரசு சார்பில் பத்து லட்சம் வெள்ளி நன்கொடையாக
வழங்கப்பட்டது.

நேற்று இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெற்ற
நிகழ்வொன்றில் மாநில அரசின் நிதி அதிகாரி டத்தோ அகமது ஃபட்ஸில்
அகமது தாஜூடின் அந்த நன்கொடைக்கான மாதிரி காசோலையை
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா
அல்ஹாஜ்ஜிடம் ஒப்படைத்தார்.

இதே நிகழ்வில் இந்த டி.எஸ்.எஸ்.சி. போட்டிக்கு மாநில அரசின் ஏழு
துணை நிறவனங்களும் நன்கொடை வழங்கின. எம்.பி.ஐ. எனப்படும்
சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் சார்பில் 200,000 வெள்ளி வழங்கப்பட்டது.

மேலும், பெர்மோடலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட், வோர்ல்ட்வைட்
ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், கே.இ.டி.பி. வேஸ்ட் மேஜேன்மெண்ட் ஆகிய
நிறுவனங்கள தலா 100,000 வெள்ளியை வழங்கின.

இவை தவிர, கும்புலான் செமெஸ்தா சென். பெர்ஹாட், பெங்குருசான்
ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் மற்றும் ஷரிகாட் கோரிடோர்
யுட்டிலிட்டி சிலாங்கூர் ஆகியவை தலா 50,000 வெள்ளியை
நன்கொடையாக அளித்தன.

இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வில் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு
அமீர் ஷா, டி.எஸ்.எஸ்.சி. தலைவரும் நிர்வாகியுமான டான்ஸ்ரீ அப்துல்
கரீம் முனிசார், விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
நஜ்வான் ஹலிமி, வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
பொர்ஹான் அமான் ஷா, கிராம மேம்பாடு மற்றும் ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இந்த நிகழ்வில் உரையாற்றிய அப்துல் கரீம், இவ்வாண்டு
சிலாங்கூர் சுல்தான் கிண்ண கால்பந்து போட்டிக்கு ஏற்பாட்டு ஆதரவை
வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :