NATIONAL

சுக்மா 2024- 31க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களைப் பெற சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், ஜூன் 12 – சரவாக் மாநிலத்தில் எதிர்வரும் ஆகஸ்டு 17 முதல் 24 வரை நடைபெறும் 21வது மலேசிய விளையாட்டுப்   போட்டியில் (சுக்மா)  முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெறுவதில் சிலாங்கூர் நம்பிக்கையுடன் உள்ளது.

இந்தப் போட்டிக்கான 488 தங்கப் பதக்கங்களில் 13 முதல் 15 சதவீதம் வரை வெல்லும் இலக்கை சிலாங்கூர்  நிர்ணயித்துள்ளது என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குனர் முகமதூ நிஜாம் மர்ஜுக்கி கூறினார்.

இப்போட்டிக்கு சிலாங்கூர் 1,138 விளையாட்டு வீரர்களை அனுப்பும் என்றும், அவர்கள் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

போட்டி நடைபெறுவதற்கு  இன்னும் நீண்ட நாட்கள் உள்ளதால் சிலாங்கூர் மாநிலத்தின் தங்கப் பதக்கங்களின் குறிப்பிட்ட இலக்கு எண்ணிக்கையை நாங்கள் அறிவிக்க விரும்பவில்லை என்று அவர் சொன்னார்.

கடந்த போட்டியில்  வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையை எங்களால் இம்முறை அதிகரிக்க  முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஏனெனில் மொத்த பதக்க எண்ணிக்கையில் 10 சதவீதத்தை  எட்டினாலும்  பதக்க எண்ணிக்கை  48ஆக இருக்கும்.  இது 2022 இல் வென்ற 31 தங்கப் பதக்கங்களை விட அதிகமாகும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டியில்  பங்கேற்கவிருக்கும் விளையாட்டு வீரர்களின் இறுதி பட்டியல் அடுத்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று முகமது நிஜாம் கூறினார்.

அனைத்து விளையாட்டு வீரர்களும்    தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக  தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர்,  பங்கேற்பாளர்களின்  பட்டியலை இறுதி செய்வதற்கு முன்பு அவர்கள் உண்மையிலேயே தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக உடல்,  மற்றும் மன மற்றும் உளவியல் தகுதிகள் பயிற்சியாளரால் தீர்மானிக்கப்படும்  என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :