NATIONALSELANGOR

டீசல் இலக்கு மானிய அமலாக்கத்திற்குப் பின் கட்டணத்தை உயர்த்திய 10 நிறுவனங்கள் மீது விசாரணை

புத்ராஜெயா, ஜூன் 14- டீசல் இலக்கு மானியம் இம்மாதம் 10ஆம் தேதி
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொருள் மற்றும் சேவை விலையைத
தாங்கள் உயர்த்தப்போவதாக அறிவித்த 10 நிறுவனங்கள் விசாரணைக்கு
அழைக்கப்பட்டன.

ஃப்ளீட் கார்டு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட நான்கு நிறுவனங்கள்
பொருள் மற்றும் சேவைக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சர் அர்மிஸாம் முகமது அலி கூறினார்.

இதர ஆறு நிறுவனங்களும் மானிய டீசல் கட்டுப்பாட்டு முறை 2.0
(எஸ்.கே.டி.எஸ்.) பட்டியலில் இடம் பெறவில்லை என்று அவர் இன்று
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இலாப ஆய்வினை மேற்கொள்வதற்கு ஏதுவாக வழங்கப்படும் சேவை
அல்லது விற்கப்படும் பொருள்கள் தொடர்பான விபரங்களை வழங்கப்படி
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும் என்று அவர்
சொன்னார்.

அவ்வாறு செய்யத் தவறினால் 723வது சட்டத்தின் (2011ஆம் ஆண்டு
விலைக்கட்டுப்பாடு மற்றும் லாப எதிர்ப்புச் சட்டம்) 57வது பிரிவின் கீழ்
அந்நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்
குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அந்த பத்து நிறுவனங்களுக்கும் அதே சட்டத்தின் 21வது
பிரிவின் கீழ் எழுத்துப்பூர்வ அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்
கூறினார்.

அந்த நிறுனங்கள் போக்குவரத்து, கட்டுமானப் பொருள், உணவு மற்றும்
பானம், இயந்திர வாடகை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவையாகும்
என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :