MEDIA STATEMENT

ஹஜ்ஜூப் பெருநாள் சோதனை- 47,000 குற்றப்பதிவுகளை ஜே.பி.ஜே. வெளியிட்டது

கோத்தா பாரு, ஜூன் 16- இவ்வாண்டு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு
சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) இம்மாதம் 10ஆம் தேதி
தொடங்கி நடத்தி வரும் சிறப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு
போக்குவரத்து குற்றங்களுக்காக இதுவரை 47,003 குற்றப்பதிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கையின் போது லைசென்ஸ் இன்றி
வாகனங்களைச் செலுத்திய குற்றத்திற்காக மிக அதிகமாக அதாவது 12,188
குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக ஜே.பி.ஜே. அமலாக்கத் துறையின்
மூத்த இயக்குநர் முகமது கிஃப்ளி ஹசான் கூறினார்.

அதற்கு அடுத்து சாலை வரி காலாவதியானது தொடர்பில் 9,711
குற்றப்பதிவுகளும் நுட்ப குற்றங்களுக்காக 8,109 குற்றப்பதிவுகளும்
வெளியிடப்பட்டன என்று அவர் சொன்னார்.

இக்காலக்கட்டத்தில் ஜே.பி.ஜே. 209,037 வாகனங்கள் மீது சோதனை
மேற்கொண்டு 24,537 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தது என்று அவர்
தெரிவித்தார்.

மேலும் இசோதனையில், போதைப் பொருளை பயன்படுத்திய
குற்றத்திற்காக 61 மற்றும் 42 வயதுடைய இரு பேருந்து ஓட்டுநர்கள்
பிடிபட்டனர். அவ்விரு ஓட்டுநர்களும் கோலாலம்பூர் நோக்கி பயணித்துக்
கொண்டிருந்த போது தடுத்து வைக்கப்பட்டனர் என்றார் அவர்.

நேற்றிரவு ஜே.பி.ஜே. கிழக்கு பிராந்திய அகாடமியில் சாலைப்
போக்குவரத்துச் சோதனையைப் பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பஸ் நிறுவன நடத்துநர்கள்
விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் எனக் கூறிய அவர், சட்டம் 715ன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இதன் தொர்பான விசாரணை அறிக்கை
தரை போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

வாகனமோட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி
செய்வது மற்றும் பாதுகாப்பாக தங்களின் இலக்கை அடைவதை உறுதி
செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த சோதனை வரும்
ஜூன் 30ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.


Pengarang :