SELANGOR

ஜூன் 25க்குள் வரி உயர்வுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம் – எம்.பி.கே.எல்.

ஷா ஆலம், ஜூன் 19-  கோலா லங்காட் நகராண்மை கழகம் எதிர்வரும் 2025 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி புதிய மதிப்பிட்டு வரியை அமல்படுத்தவுள்ளது. இந்த வரி உயர்வுக்கு எதிராக  தங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்க எதிர்வரும் ஜூன் 25ஆம் தேதி வரை பொது மக்களுக்கு எம்.பி.கே.எல். வாய்ப்பினை வழங்கியுள்ளது.

கோல லங்காட் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.எல்.) தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் உள்ள காலி நிலங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக வளாகங்களுக்கு 37 ஆண்டுகளாக அதாவது கடந்த 1987ஆம் ஆண்டு முதல் மதிப்பீட்டு வரியை உயர்த்தவில்லை.

பொது மக்கள் கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவும் [email protected] அல்லது  https://mpkl.gov.my/sumber/muat-turun-borang/jabatan- என்ற அகப்பக்கத்தில் உள்ள ஆட்சேப மனுக்களை பதிவிறக்கம் செய்வதன் வாயிலாகவும் ஆட்சேபங்களைத் தெரிவிக்கலாம்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் 20 முதல் 40 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு செய்யவில்லை.

காஜாங் நகராண்மைக் கழகம் 39 ஆண்டுகளாக (1985) மதிப்பீட்டு வரியை உயர்த்தவில்லை. கோல லங்காட் நகராண்மைக் கழகம் 37 ஆண்டுகளாகவும் (1987), செலாயாங் நகராண்மைக் கழகம் 32 ஆண்டுகளாகவும் (1989) மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்யவில்லை.

சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மற்றும் பண்டார் சன்வே ஆகிய இடங்களுக்கான மதிப்பீட்டு வரியை கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கவில்லை. யுஎஸ்ஜே, பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், மற்றும் செர்டாங் ஆகிய பகுதிகளில் கடந்த 1996 முதல் அதாவது 28 ஆண்டுகளாக வரி உயர்வை அமைல்படுத்தவில்லை.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 28 ஆண்டுகளாகவும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 27 ஆண்டுகளாகவும் ஷா ஆலம் மாநகர் மன்றம் 18 ஆண்டுகளாகவும் வரியை உயர்த்தவில்லை.

இருப்பினும், சொத்து உரிமையாளர்கள் இந்த புதிய மதிப்பீட்டு வரிக்கு தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களிடம் பொது மக்கள் தங்கள் ஆட்சேபத்தை தெரிவிக்கலாம்.

ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான தேதியை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து கொள்ள இயலும் என்பதோடு  சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் அதற்கான தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரத் திட்டமிடலை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கு இந்த மதிப்பீட்டு வரி மறு ஆய்வு மிக முக்கியம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே 30ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :