SELANGOR

கோத்தா கெமுனிங்கில் வாகன நெரிசலுக்கு தீர்வு காண்பதில் முன்னுரிமை- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கூறுகிறார்

ஷா ஆலம், ஜூன் 19- கெசாஸ் நெடுஞ்சாலை தொடங்கி கோத்தா கெமுனிங் சாலை சுற்றுவட்டம் வரை காணப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது இந்த தவணைக்கான தனது தலையாயப் பணியாகும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.
அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் விதமாக
மேம்பாலம் மற்றும் மாற்று வழியை அமைப்பது தொடர்பான பரிந்துரையை தாம் முன்வைத்துள்ளதாக அவர் சொன்னார்.
கோத்தா கெமுனிங் சாலை சுற்றுவட்டத்தைக் கடப்பதற்கு ஒன்று முதல்
இரண்டு மணி நேரம் வரை பிடிப்பது தொடர்பில் பொது மக்கள் தங்கள்
மனக்குமுறலை வெளியிட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் இரண்டு மேம்பாலங்களையும் மாற்றுச் சாலையையும்
நிர்மாணிக்க 5 கோடி வெள்ளி செலவாகும் என ஷா ஆலம் மாநகர்
மன்றம் மதிப்பிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய கவனம்
செலுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று சிலாங்கூர்கினிக்கு அளித்த
பேட்டியில் அவர் பிரகாஷ் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கான குறுகியக் கால நடவடிக்கையாகப் பொது
மக்கள் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்
வகையில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச சேவை அதிகளவில்
மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்
அவர் சொன்னார்.
உதாரணத்திற்குக் கோத்தா கெமுனிங்கிற்கு நேரடி பஸ் சேவை இல்லாத
காரணத்தால் மேரு சுகாதார மையத்தில் சிகிச்சைப் பெறச் செல்வோர் பஸ்
மாற வேண்டிய நிலை உள்ளது என அவர் கூறினார்.இதுதவிர, அதிக சாலை விபத்துகள் நிகழும் ஜாலான் புக்கிட் கெமுனிங்
பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் தாம் கவனம்
செலுத்தவுள்ளதாகப் பிரகாஷ் தெரிவித்தார்.

அச்சாலையில் காணப்படும் குழிகளைச் சரிசெய்வது மற்றும் பழுதான
சாலை விளக்குகளை மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்வது
தொடர்பில் சிலாங்கூர் பொதுப் பணி இலாகாவுடன் தாம் பேச்சு நடத்தி
வருவதாகவும் அவர் சொன்னார்.
வட்டார மக்களின் நலன் கருதி இந்த பணிகளை பொதுப்பணி இலாகா
விரைந்து மேற்கொள்ளும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Pengarang :