NATIONAL

வெப்ப வானிலையின் எதிரொலி- கிளந்தானில செயற்கை மழையைப் பெய்விக்க நடவடிக்கை

புத்ராஜெயா, ஜூன் 19- கிளந்தான் ஆற்றில்  நீர் தொடர்ந்து  வற்றி வருவதைத் தடுக்கவும் வெப்ப வானிலை மற்றும் தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தை சமாளிக்கவும் செயற்கை மழையை பெய்விக்கும்  (ஓபிஏ) நடவடிக்கையை கிளந்தானில்  எதிர்வரும் ஜூன் 21 முதல் 23 வரை மேற்கொள்ள அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

கெமுபு விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (கடா) வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுவின் (ஜே.பி.பி.பி.) தலைவருமான அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

நட்மா எனப்படும் பேரிடர் மேலாண்மை நிறுவனம், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு,   மலேசிய வானிலை ஆய்வுத் துறை,  மற்றும் அரச மலேசிய ஆகாயப் படையின் ஒருங்கிணைப்பில்  இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த செயற்கை மழை பெய்விப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில பேரிடர் உதவி நிதி சேமிப்பிலிருந்து  50 லட்சம் வெள்ளியை   பயன்படுத்த தாம் அனுமதி வழங்கியுள்ளதாக  அகமது ஜாஹிட் குறிப்பிட்டார்.

மூன்று நாட்களில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் வழி  கிளந்தான் ஆற்றின் நீர் மட்டம் அதிகரிக்கும். இதன் மூலம்  தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய முடியும் என்றார் அவர்.

ஒ.பி.ஏ.  என்பது கிளந்தான் நதியில்  நீர் அளவு குறைவதைச் சமாளிக்கவும் வெப்ப வானிலை  மற்றும் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் மத்திய அரசு எடுத்த ஆரம்ப நடவடிக்கையாகும். இது  2024 ஆம் ஆண்டு செப்டம்பர்   இறுதி வரை தொடரும் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை குறைந்த மழைப்பொழிவு பதிவானது. இதன் காரணமாக கிளந்தான் ஆற்றின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து  கடா வேளாண்  பகுதி முழுவதும் பம்ப் செயல்பாடுகளை சீர்குலைத்தது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :