SELANGOR

ஷா ஆலம், செக்சன் 7 இரவுச் சந்தைக்கு தெங்கு அமீர் வருகை

ஷா ஆலம், ஜூன் 20 –  சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா நேற்று மாலை இங்குள்ள செக்சன் 7 இரவுச் சந்தைக்கு ( பாசார் மாலாம்) வருகை புரிந்தார்.

நேற்று  தொடங்கிய பெட்டாலிங் மாவட்டத்திற்கான ககாசான் ரும்புன் சிலாங்கூர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த வருகையை அவர் மேற்கொண்டார்.

கிராமப்புற மேம்பாடு, ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  டத்தோ ரிசாம் இஸ்மாயில் மற்றும் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான  மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி ஆகியோரும் ராஜா மூடாவுடன் உடனிருந்தனர்.

இந்த சந்தையில் ஏறக்குறைய ஒரு மணி நேரத்தைச் செலவிட்ட தெங்கு அமீர்,  அங்குள்ள கடைகளைப் பார்வையிட்டு  வர்த்தகர்களுக்கு ஏப்ரான்கள் மற்றும் தொப்பிகளை வழங்கியதோடு பொது மக்களுடனும் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வின் சிறப்பு அங்கமாக  எம்பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் வழங்கிய தலா 10.00 வெள்ளி மதிப்பிலான  ரஹ்மா சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் டிஜிட்டல் கூப்பன்கள் முதல் 500 வருகையாளர்களுக்கு வழங்கப்பட்டன.


Pengarang :